வன்னிப்பிரதேசத்திற்கான ஒரேயொரு தரைவழித் தொடர்புக்கான நுழைவாயிலாக இருக்கும் ஏ9 வீதியின் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் மூடப்பட்டிருப்பதனால், 500க்கும் மேற்பட்டவர்கள் வன்னப்பிரதேசத்தில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அத்தியாவசிய உணவு விநியோகச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர வேலைகளுக்காக வன்னிப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் இருந்து சில தினங்களுக்கு முன்னர் வவுனியா நகரப்பகுதிக்கு வந்தவர்களும் கடமையின் நிமித்தம் வந்தவர்களுமே இ;வ்வாறு திரும்பிச் செல்ல முடியாமல் இங்கேயே தங்கியிருக்க நேர்ந்தள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பலர்; தமக்குத் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்களது வீடுகளில் தங்கியிருக்கின்ற அதேவேளை பலர் இங்குள்ள விடுதிகளில் தங்கியிருக்கின்றார்கள். இவ்வாறு விடுதியில் தங்கியுள்ளவர்கள் தமது கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டதனால், தமக்கு சாப்பிடுவதற்கு வழியில்லாத நிலை உருவாகியிருப்பதாக இன்று வவுனியா செயலகத்திற்குச் சென்று அரச அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதனயைடுத்து, ஒவ்வர் (OFFER) என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு விடுதிகளில் தங்கியிருப்போருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட புனர்வாழ்புப் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த ஏற்பாட்டையடுத்து தமக்கு இன்று பகல் முதல் உணவு வழங்கப்படுவதாகவும் விடுதிகளில் தங்கியுள்ள வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர