சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபர் எனக் கருதப்படுபவரின் தந்தை கடத்தப்பட்டுள்ளார் என்று காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள் கொழும்பு கிராண்ட்பாசில் அப்போதைய அரச தலைவர் ரணசிங்க பிரேமதாச மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலை நடத்தியவர் அரச தலைவரின் வீட்டில் பணிபுரிந்த ஒருவரே என்றும் சம்பவம் இடம்பெற்ற அன்று ஈருருளியில் வந்த சந்தேக நபர் கிராண்ட்பாசில் மே நாள் பேரணியில் வந்து கொண்டிருந்த அரச தலைவரின் வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாவும் அப்போது நடைபெற்ற காவல்துறை விசாரணைகள் தெரிவித்திருந்தன.
இச்சம்பவத்தில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர் என்று கருதப்படும் சந்தேக நபரான பாபு என்பவரின் தந்தையே கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.
ரம்புக்கனவில் உள்ள கோயிலொன்றின் பூசாரியாகிய இவருக்கு வயது 70 ஆகும்.
காவல்துறை அதிகாரிகள் என்று தம்மை அடையாளம் காட்டி இந்த முதியவர் கடத்தப்பட்டுள்ளார் என்றும் இவரை விடுதலை செய்வதற்காக இரண்டு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.