நான் பணத்திற்காகவோ அல்லது மகிழ்ச்சியாக எனது வாழ்வைக்கொண்டு செல்வதற்காகவோ வடமத்திய மாகாணசபைத்தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவில்லை. எனது தாய்நாட்டு எனது பிரதேச மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போட்டியிடுகின்றேன்.
வடமத்திய மாகாண சபைத்தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பின்னர் அது பெறவுள்ள தொடர் வெற்றிகள் சர்வதேச ரீதியில் எதிரொலிக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபைத்தேர்தல்களுக்கான முதலமைச்சர் வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்குபடுத்தியிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, நான் ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றேன் என்றவுடன், வெளிநாடுகளில் தூதுவராக, இன்னும் பிறபதவிகளுடன் வாய்ப்புக்கள் பல என்னைத்தேடி வந்தன, ஆனால் அவற்றுக்கு நான் தலையாட்டவில்லை, இந்த நிலையில் தற்போது என்னையும், என் மனைவி, குழந்தைகளை மிரட்டும் வேலைகள் இடம்பெற்றுவருகின்றது. எனது வீட்டில் வெளிநாட்டு இலக்கத்துடன் எனது மனைவிக்கு மிரட்டல் அழைப்புக்கள் வந்துள்ளன.
நான் இராணுவத்தில் பணியாற்றும்போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தபோது விடுதலைப்புலிகளிடம் இருந்துகூட இப்படியான கோளைத்தனமான மிரட்டல் அழைப்புக்கள் எதுவும் வந்ததில்லை.
இங்கு பலர் ஜானக பெரேரா யார்? என்று கேட்கின்றார்கள், அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன், நான் ஜெனரல் ஜானக பெரேரா, எனது தாய்நாட்டுக்காக நான் இராணுவத்தில் பல வருடங்கள் சேவையாற்றி பல சாதனைகளும் புரிந்து இளைப்பாறியவன், கேள்வி கேட்பவர்கள் போன்று எந்தவொரு அனுபவமும் இல்லாமல், உயர்மட்டத்தினருக்கு சவரி வீசி பதவிகளை பெற்றுக்கொள்பவன் நான் அல்ல. எனது தாய் நாட்டிற்காக உண்மையில் சேவை புரிய விரும்புவனே நான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.