மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தைப் புனரமைப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய நிதியை "கிழக்கின் உதயம்" என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்லடிப் பாலத்தை புதிதாக நிர்மாணம் செய்வதற்கு ஆழிப்பேரலை திட்டத்தின் கீழ் ஜப்பானிய நாட்டினால் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது என்பதனை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
கடந்த 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 26 ஆம் நாள் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறு பாலம், பெரியகல்லாறு பாலம், ஓட்டமாவடிப் பாலம் மற்றும் கல்லடிப் பாலம் ஆகியனவற்றை புதிதாக அமைப்பதற்கு ஜப்பான் நிதி வழங்கியிருந்தது.
இதேபோன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளுக்கும் ஜப்பான் நிதி வழங்கி பாலங்கள் அமைக்கப்பட்டும் உள்ளன.
இதன்படி ஏற்கனவே கோட்டைக்கல்லாறுப் பாலம், பெரிய கல்லாறுப் பாலம் என்பன புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக எந்தவித ஆடம்பரமுமின்றி திறந்து வைக்கப்பட்டன.
கடந்த 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டு பகுதிகளில் கல்லடிப் பாலத்தின் வேலைகள் தொடங்குவதற்கு தொடர்புபட்ட ஜப்பானிய நாட்டின் அனைத்துலக உறவுகளுக்கான வங்கி முன்வந்த போதிலும் அதனை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தட்டிக் கழித்து காலத்தை இழுத்தடித்து வந்தது.
ஆனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தும் அரசின் சதித் திட்டத்தின் மூலம் அரசியல் இலாபத்திற்காக "கிழக்கின் உதயம்" என்ற பெயரில் கல்லடிப் பாலத்தின் வேலைகளை தொடங்குவது மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடும் செயலாகும்.
மட்டக்களப்பு மாநகர சபையில் அரசு வெற்றி பெறுவதற்கு செய்யும் கைங்கரியம் என்பதையும் மட்டக்களப்பு நகர மக்கள் மறந்துவிடக்கூடாது.
ஏற்கனவே ஆழிப்பேரலைத் திட்டத்தின் மூலம் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் பாடசாலைக் கட்டிடங்கள், வீடுகள், பொதுக் கட்டடங்கள் அனைத்தையும் "கிழக்கின் உதயம்" திட்டம் என சில அமைச்சர்கள் தம்பட்டம் அடித்து சுய அரசியல் இலாபம் தேடுவதையும் எமது மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.