சிறிலங்காவில் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்காக நடைமுறையில் உள்ள தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து அதிலிருந்து தென் இந்திய மாநிலங்களுக்கு வழங்குவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் எதிர்வரும் மாதம் கையெழுத்திடப்படவுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தென் மத்திய மின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் தென்னிந்திய மாநிலங்களுக்கு அந்த தென் மத்திய மின் தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும்.
தற்போது சிறிலங்காவில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
அந்த மின் உற்பத்தியையும் தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு தென் மத்திய மின் தொகுப்பு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வாய்ப்புக்களை அறிய 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
மின் தொகுப்புகளை இணைப்பதற்கான வாய்ப்புக்கான ஆய்வை இந்திய மின் தொகுப்பு கழகம் மேற்கொள்ளும் என்றும் அதன் அறிக்கை எதிர்வரும் ஒக்ரோபர் அல்லது நவம்பரில் இந்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்தும் சிறிலங்காவுக்கு குழாய் மூலம் மின்சாரம் வழங்க ஏற்கெனவே இந்தியா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.