ஜே.வி.பியின் உயர்மட்டத் தலைவர்களிடையே அதிகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள மனக்கசப்பு பெரும் உட்கட்சிப் பூசலாக உருவெடுத்துள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தீவிர அரச எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத் திருக்கும் கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவும், அரச ஆதரவு மிதவாதப் போக்கை விரும்பும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ஸவுமே பிளவுபட்டு நிற்கும் இரு கன்னைகளுக்கும் தலைமை வகிக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக நிலைப்பாடு எடுத்து, அரசுக்கு முண்டுகொடுக்க முயலும் விமல் வீரவன்ஸ அணி குறித்து, மாற்று அணி கட்சி மட்டத்தில் பரவலாகக் குறைகூறி வருகின்றதாம்.இதேவேளை, கட்சியின் உள்ளக அமைப்புகளின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதில் தீவிர முயற்சி எடுத்துவரும் விமல் வீரவன்ஸவின் ஆதரவாளர்கள், அதில் குறிப்பிடத்தக்களவு வெற்றியையும் எட்டியிருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், கட்சித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க இப்போது பகிரங்கமாக எடுத்திருக்கும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடும் கட்சிக்குள் கடும் அபிப்பிராய பேதத்தை எழுப்பியிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னைய காலங்களில் கட்சிகளில் எழுந்த கருத்து முரண்பாடுகளை மூடிமறைத்தமைபோல, இப்போதும் மறைக்க முடியாது என்றும் அத்தகைய மூடுமந்திர நிலையை இப்போதைய உட்கட்சி மோதல்கள் கடந்துவிட்டன என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.