யுத்தத்தின் உண்மை நிலையை நாட்டுக்குத் தெளிவுபடுத்துவதற்காக ஊடக வியலாளர்களை யுத்தப் பகுதிகளுக்குச் செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.தே.கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை மாத்திரம் இதற்கு அனு மதிப்பது போதாது என்றும், தனியார் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அக் கட்சி கூறியுள்ளது.அக்கட்சியின் எம்.பியான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
யுத்தத்துக்காக அதிக தொகைப்பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை நிர்வகிப்பது நாடாளுமன்றம்தான். இந்நிதி உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்று நாட்டு மக்கள் எம்மிடம் கேட்கின்றனர்.உண்மையில் இந்த நிதி யுத்தத்துக்காக நீதியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும்.நல்ல முறையில் இந்த நிதி செலவிடப்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டினால் உண்மையில் நாம் மகிழ்ச்சியடைவோம்.
எப்படி இருப்பினும், இந்த யுத்தத்தின் உண்மைநிலையை இந்த நாட்டு மக்கள் அறியவேண்டும். அதற்காக ஊடகவியலாளர்களை யுத்தப்பகுதிகளுக்குச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.வெளிநாடுகளில் ஊடகவியலாளர்கள் யுத்த களத்துக்குச் சென்றுதான் செய்திகளைச் சேகரிக்கின்றனர். அப்போதுதான் உண்மை நிலை வெளியே தெரியவருகின்றது.இங்கேயும் அரச ஊடகங்களில் உள்ள ஊடகவியலாளர்களை மாத்திரமன்றி தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்களையும் யுத்தப் பகுதிகளுக்குச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.