இலங்கையில் மீண்டும் வன்முறைகள் மூண்டுள்ளமை குறித்து அமெரிக்கா அச் சம் வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவும் இதே உணர்வைக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் நிக்கொலஸ் பேர்ன்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.தென்னாசியாவில் இந்தியாவும் அமெரிக்காவும் சகாக்களாக மாறியுள்ளன என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வாஷிங்டனில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான உரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சுச் சேவையிலிருந்து அடுத்தவாரம் ஓய்வு பெறப்போகிறார் நிக்கொலஸ் பேர்ன்ஸ். எனினும் அங்கு தொடர்ந்தும் இந்திய விவகாரங்களைக் கையாள்வார் என்று கூறப்படுகின்றது.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறைகள் மூண்டுள்ளமை குறித்து இரு நாடுகளும் அச்சம் கொண்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தி இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அண்மையில் இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக இந்தியா துணிச்சலான முடிவை எடுக்க வேண்டுமென்றும் நிக்கலஸ் பேர்ன்ஸ் வலியுறுத்தியிருந்தார்.