சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.
ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவரின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை.
புதுடில்லியிலுள்ள ""இன்டியா கேற்'' வளாகத்தில் படைவீரர் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார். அதன் பின்னர் அவருக்கு இந்திய இராணுவத்தின் கேந்திர மையங்களில் ஒன்றான, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான ""சவுத் புளொக்'' இல் இராணுவ அணிவகுப்பு மரி யாதை வழங்கப்படும் என்றும் அவ் இணையத்தள செய்தி தெரிவிக்கிறது.