மன்னார் பண்டிவிரிச்சானில் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 11 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர்.
பெருமளவான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
பண்டிவிரிச்சானில் அமைந்துள்ள விடுதலைப்புலிகள் முன்னணி நிலைகளைக் கைப்பற்றும் நோக்கில் நேற்றுக் காலை 6.00 மணியிலிருந்து படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். முன்நகர்வு முயற்சிக்கு ஆதரவாகப் படையினரின் தளங்களிலிருந்து செறிவான ஆட்லெறி, மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இவற்றுக்கு மத்தியிலும் படையினரை எதிர்கொண்ட விடுதலைப்புலிகள் முறியடிப்புத் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் மாலை 5.00 மணிவரைக்கும் சமர் நடைபெற்றன.
இதன்போது படையினர் தரப்பில் 11 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும் பெருமளவான படையினர் காயமடைந்துமுள்ளனர். இழப்புக்களைச் சந்தித்த படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
இதேவேளையில் விடுதலைப்புலிகளின் நிலைகளை ஊடறுத்து உள்நுழைய முற்பட்ட ஆழஊடுருவும் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று பகல் 2.00 மணிக்கு இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆழ ஊடுருவும் அணியினரை வழிமறித்த விடுதலைப்புலிகள் அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.
இழப்புக்களைச் சந்தித்த படையினர் வெடிபொருட்களைக் கைவிட்டு தமது நிலைகளிற்குத் தப்பி ஓடியுள்ளனர். இதன்போது கிளைமோர்கள் - 02 உட்பட்ட படைப்பொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.