சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் இலண்டன் உளவாளிகளை, ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா கடுமையாக எச்சரித்துள்ளார்.
கல்விமான்கள் என தமக்குத் தாமே பெயர்சூட்டியவாறு, கடந்த 17ஆம் நாளன்று இலண்டனில் இருந்து கொழும்பு சென்ற மகிந்த ராஜபக்ஸவின் ஐந்து உளவாளிகள், அரசாங்க அமைச்சர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்ததோடு, சிறீலங்கா படைகளின் அதியுச்ச பாதுகாப்புடன், யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.
எனினும், தனது அங்கீகாரம் இன்றி நேரடியாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் அணுகியதால், கடும் சீற்றமடைந்த துணைப்படை ஈ.பி.டி.பி கும்பலின் முதன்மை ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா, தொலைபேசி மூலம் இவர்களை எச்சரித்துள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குறிப்பிட்ட ஐந்து இலண்டன் உளவாளிகளும் பயணம் செய்த பொழுது, அவர்களின் பயணத்தை குழப்பும் நடவடிக்கைகளையும், ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் ஆத்திரமடைந்திருக்கும் ஐந்து இலண்டன் உளவாளிகளும், இது குறித்து சிறீலங்கா அதிபரிடம் முறையிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, குறிப்பிட்ட ஐந்து இலண்டன் உளவாளிகளுக்கும், சிறீலங்கா துணைப்படை ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் ஐரோப்பிய இணைப்பாளரான, முஸ்தாபா எனப்படும் ராமராஜன் எனும் போதைப் பொருள் கடத்தல்காரருக்கும் மத்தியில், முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக, ஆயுததாரி முஸ்தாபாவின் தலைமையில் இலண்டனில் இயங்கி வரும், ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் வானொலிக்கு, சிறீலங்கா அரசாங்கத்தால் மாதாந்தம் ஐயாயிரம் பவுண்கள் பணம் வழங்கப்படுவதாக, ஐந்து உளவாளிகளும், தற்பொழுது பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன், ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் வானொலிக்கு வழங்கப்படும் பணத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும், சிறீலங்கா அதிபரிடம் ஐந்து இலண்டன் உளவாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் கருணா - பிள்ளையான் கும்பல்களின் உளவாளிகளுக்கும், ஈ.என்.டி.எல்.எவ் - ஈ.பி.டி.பி ஆகிய கும்பல்களுக்கும் மத்தியில், அண்மைய மாதங்களாக முறுகல் நிலவுவதோடு, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக, கடந்த 2006ஆம் ஆண்டு ஆயுததாரி முஸ்தாபா எனப்படும் ராமராஜன் சுவிற்ஸர்லாந்தில் சிறைவைக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.