மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கையோடு கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் மாத இறுதி வாரத்தில் கோருவது என்றும் தேர்தலை எதிர்வரும் மே மாதம் நடத்துவது என்றும் அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.
இது குறித்து தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் அரச உயர்மட்டத்தினர் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். அடுத்த வாரம் இது குறித்த அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இது குறித்து அமைச்சர்கள் சிலருடன் முக்கிய பேச்சுவாரத்தைகளை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசின் பங்காளிக் கட்சிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிழக்கில் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் குறையாது விடின் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது.
அண்மையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த போது ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கியிருக்கிறார் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.