இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் தில்லியில் கையெழுத்தாகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இலங்கை மின்துறை அமைச்சர் டபிள்யூடிஜே செனவிரத்னே அடுத்த மாதம் தில்லி வருகிறார். அவருடன் மின்துறைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய குழு தில்லி வருகிறது. தில்லியில் பேச்சு நடத்தி ஒப்பந்தத்தில் இக்குழு கையெழுத்திட உள்ளது.
இரு நாடுகளிடையே உள்ள பவர் கிரிட்களை ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை முதலில் தயாரிக்கப்படும். இந்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு 30 லட்சம் டாலர் (ரூ. 12 கோடி) செலவாகும் எனத் தெரிகிறது. இதை இரு நாடுகளும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும். இரு நாடுகளிடையிலான பவர் கிரிட்களை இணைப்பதான முடிவு பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கையில் இறுதி செய்யப்பட்டது. இலங்கைக்கு மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பயணம் மேற்கொண்டிருந்தபோது இது இறுதி செய்யப்பட்டது.
தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கையை இந்தியாவின் கிரிட் கார்ப்பரேஷன் மேற்கொள்ளும். இந்த அறிக்கை இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டுவிடும்.
கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்ற "சார்க்' நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் இப்பிராந்தியத்தில் உள்ள மின் கிரிட்களை இணைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் தெற்காசிய பிராந்தியத்தில் மின்சாரம் தடையின்றி கிடைக்க வழியேற்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்தியாவிலிருந்து நேபாளம் மற்றும் பூடானுக்கு கிரிட் இணைப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல இலங்கை மற்றும் வங்கதேசம் இடையே இதுபோன்று கிரிட் இணைப்பு ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கைகளை ஆராய முடிவு செய்யப்பட்டது.