கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றி சென்ற நூற்றுக்கு அதிகமான லொறிகள் மீண்டும் வவுனியாவுக்கு திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை தோன்றியுள்ளது. விடுவிக்கப்படாத கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகள் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு வருவதற்காக புளியங்குளத்தில் காத்து நிற்கின்றன.
ஓமந்தை சோதனைச் சாவ டிக்கு ஊடாக ஒரு நாளைக்கு இரண்டு லொறிகளுக்கே வவுனியாவுக்கு வர அனுமதி வழங்கப்படுகிறது. முன்னர் நாளாந்தம் பத்துக்கு மேற்பட்ட லொறிகள் வவுனியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான லொறிகளுக்கு மட்டும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகள் திரும்பி வராத காரணத்தினால் அம் மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலைமை குறித்து வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை இது குறித்து உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிய வருகிறது.