இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 வருடங்களாக அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சொந்த கிராமங்களைச் சென்று பார்வையிட ஒழுங்குகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.
மூதூர் கிழக்கு பிரதேசத்தில் ஏற்கனவே 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் மீள் குடியேற்றங்களில் தாமதங்கள் ஏற்பட்டன.
இருப்பினும் அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் படி பாடட்டாளிபுரம், நல்லூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய பிரிவுகளில் முழுமையாகவும், நவரத்னபுரம், சேனையூர், கட்டைப்பறிச்சான் தெற்கு ஆகிய பிரிவுகளில் ஒரு பகுதியிலும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக சிவில் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே தமது கிராம பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்றை மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சென்று பார்வையிட அழைத்துச் செல்லுமாறு இவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறுகின்றார்