தமது பாதுகாப்பு தொடர்பாக பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் பிரான்ஸ் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், தூதரகத்தின் அதிகாரி சுகீஸ்வர சேனாதீர பிரான்ஸ் 24 தொலைக்காட்சி சேவைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தமது பாதுகாப்பு தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமக்கு 18 பாதுகாப்பு ஊழியர்களை வழங்கியுள்ளதாக சேனாதீர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னரே தமது பாதுகாப்பிற்கு எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரான்ஸ் தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர் கெபசீன் ஹென்றி, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விசேட செய்தித் தொகுப்பொன்றை தயாரிப்பதற்காக இலங்கை வந்திருந்த வேளையில் அவர் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் மனோ கணேசன் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பூசா முகாமிற்கு தமிழ்க் குடும்பமொன்றை அழைத்துச் செல்லும் வழியில் குறித்த ஊடகவியலாளர் கடந்த நத்தார் தின இரவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அன்றைய தினம் இரவு சிறைவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரினால் தயாரிக்கப்பட்ட ்தமது மகன் திரும்பி வரும் வரையில் காத்திருக்கும் இலங்கைத் தமிழ் தாய்ீ என்ற விசேட நிகழ்ச்சியில் எம்.பி.மனோ கணேசனும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.