குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் கடந்த 22-ந் தேதி 2 படகுகளில் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். கடல் எல்லையை தாண்டி வந்ததாக கூறி 25 பேரையும் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை நீர்கொழும்பு என்ற இடத்தில் மீனவர்கள் சிறைவைக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. கைதான 25 மீனவர்கள் குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இலங்கை கடற்படையிடம் சிக்கிய குமரி மாவட்ட மீனவர்களை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை விடுதலை செய்தது. நள்ளிரவில் இந்தியா- இலங்கை கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படையினரிடம் மீனவர்களை ஒப்படைத்தனர்.
25 மீனவர்களும் இன்று காலை 8 மணியளவில் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். குமரி மாவட்ட மீன் துறை ஆய்வாளர் பி.வி. சாமியிடம் மீனவர்களை கடலோர பாதுகாப்பு படை ஒப்படைத்தது. பின்னர் நாகர்கோவில் அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலாவை சந்தித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சொந்த ஊரில் மீனவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.
இலங்கை கடற்படையிடம் சிக்கியது எப்படி? என்பது பற்றி விடுதலையான மீனவர் நெர்சன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இவர் குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி கடல் பகுதியில் 22-ந் தேதி மாலை நாங்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தோம். அந்த வழியாக இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு நிறைய மீன்கள் கிடைக்கும் என்றனர். நாங்களும் அவர்கள் சொன்ன இடத்தில் போய் மீன் பிடித்தோம்.
அப்போது இலங்கை கடற்படை எங்களை சுற்றி வளைத்தது. கடற்படை வீரர்கள் தண்ணீருக்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு எங்களை மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்து நாங்கள் கைகளை தூக்கி நின்றோம்.
எங்கள் அனைவரையும் தண்ணீருக்குள் குதிக்குமாறு கூறினர். நாங்களும் தண்ணீருக்குள் குதித்தோம். அதன்பின் எங்கள் படகில் அவர்கள் ஏறி சல்லடை போட்டு தேடினார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஏதாவது கடத்திச் செல்கிறோமா? என அவர்கள் சோதனை போட்டனர்.
சோதனை முடிந்ததும் என்னையும், சுதின் என்ற மீனவரையும் அவர்களது படகில் ஏறச் சொன்னார்கள். நாங்கள் ஏறியதும், எங்களை சரமாரியாக தாக்கினர். நீங்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், என்ன நோக்கத்திற்காக வந்தீர்கள்? என்று கேட்டு அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். நாங்கள் மீன்பிடிக்க வந்திருக்கும் விவரத்தை அவர்களிடம் சொன்னோம்.
பிறகு கைது செய்து எங்களை இலங்கைக்கு கொண்டு சென்று விட்டனர். நாங்கள் சென்ற படகிலேயே எங்களை சிறைவைத்து இருந்தனர். நாங்கள் கொண்டு சென்று இருந்த பொருட்கள் மூலம் உணவு தயார் செய்து சாப்பிட்டோம். தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மூலம் தற்போது நாங்கள் உயிருடன் மீண்டு இருக்கிறோம்.
இதற்காக பாடுபட்ட தமிழக அரசு, குமரி மாவட்ட கலெக்டர் ஜோதிநிர்மலா மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.