எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவிருக்கும் தென்னாசியப் பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கலந்துகொள்ளச் செய்வதில் கொழும்பு அரசு பகீரதப் பிரயத்தன முயற்சி எடுத்துவருகின்றது எனத் தெரிகின்றது.
இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் தாமே நேரடியாகக் கலந்துகொள்வதற்கு இணங்கினார் என்ற பதிலுடன் வருமாறு பணித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் என்றும் தெரியவருகின்றது.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை கொழும்பு அரசு கையாளும் விதம் குறித்து புதுடில்லியிலும், தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் கடும் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகின்றது.
அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா சந்திக்கவிருக்கையில் புதுடில்லி அரசு, கூட்டணிக் கட்சிகளில் பெரிதும் தங்கியிருக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்தச் சூழலில் சர்ச்சைக்குரிய இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டு வீண் அரசியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள இந்திய ஆளும் கூட்டமைப்பின் பிரதமரான மன்மோகன் சிங் விரும்பவில்லை என அரசியல் வட்டாரங்களில் பரவலாகச் செய்தி அடிபடுகின்றது.
ஏற்கனவே, கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான அழைப்பை இந்தியப் பிரதமர் நாசூக்காகத் தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமக்குப் பதிலாக நாட்டின் தலைவர் என்ற பொறுப்பில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீலே, கண்டி சார்க் மாநாட்டில் கலந்து கொண்டால் என்ன என்ற கருத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஆனாலும், இலங்கை அரசு எப்படியும் சார்க் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து வருவதில் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது.
அவரை சார்க் மாநாட்டுக்கு அழைத்து வருவதன் மூலம், அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்வுகளில் அவர் பங்குபற்றாமல் தவிர்த்தனால் எழுந்த அவமானத்தைத் துடைத்து விடலாம் எனக் கொழும்பு கருதுவதாக தெரிகின்றது.
மேலும், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கும் மஹிந்தவின் அரசுக்கு, இந்தியப் பிரதமர் தனக்குப் பக்க பலமாக உள்ளார் என்று இங்கு காட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும்
அதை வெளிப்படையாகக் காட்டும் முயற்சியில் மஹிந்த அரசு தவறுமானால், அது அந்த அரசுக்கு நாட்டுக்குள்ளேயும், வெளியேயும் பல பின்னடைவுகளை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
சார்க் மாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே
* இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு பகிரங்கப்படுத்தி விடும்.
* அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு விடும்.
* கிழக்கு மாகாண சபையும், வடக்கு மாகாண ஆலோசனை சபையும் இயங்கத் தொடங்கி விடும்.
இவை போன்ற உறுதி மொழிகளை இந்தியத் தரப்புக்கு வழங்கி, ஓகஸ்ட் சார்க் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் வருவார் என்ற உறுதிமொழியோடு திரும்புமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைப் பணித்து, அவரைப் புதுடில்லி அனுப்பி வைத்திருக்கின்றது கொழும்பு அரசுத் தலைமை என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
ரோஹித போகொல்லாகமவின் முயற்சி பலிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இரண்டு விதமான கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தியப் பிரதமரின் உத்தேச இலங்கை விஜயத்துக்கு இப்போது புதுடில்லி பெயரளவுக்கு சம்மதித்தாலும் அப்போதைய களநிலைப் போக்கைப் பார்த்தே புதுடில்லி இது விடயத்தில் இறுதி முடிவுகளை எடுக்கும் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது.