ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு எதிர்க்கவுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கு பற்றுவதற்காக இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் கடத்தப்படுதல், அச்சுறுத்தப்படுதல், கைதுசெய்யப்படுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை இந்த அரசாங்கக் குழு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் ஜெனீவா சென்றுள்ளனர்.
இன்று ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத்தொடரில் இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகளும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுமெனத் தெரியவருகிறது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்குமென அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான விசேட கண்காணிப்பாளர் மன்வேர் நொவாக்கின் அறிக்கை முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுமெனக் கூறப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல்போதல்கள், கைதுகள், சித்திரவதைகள் போன்றவற்றை நொவாக்கின் அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டும் எனத் தெரியவருகிறது.
அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நொவாக்கின் அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொலிஸார், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்று ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 7வது கூட்டத்தொடரில் கடும் அழுத்தத்தைக் கொடுக்கும் எனத் தெரியவருகிறது. அண்மையில் பிரித்தானியாவிலுள்ள மனித உரிமை அமைப்புக்களை சந்தித்த பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மலோக் பிரவுண், இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவா கூட்டத்தொடரில் வலியுறுத்த இருப்பதாகக் கூறியிருந்தார்.
எனினும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் மறுப்பார்கள் எனவே அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.