விடுதலை புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரிக்கும் தொண்டு நிறுவனங்களை தடை செய்யுமாறு பிரித்தானிய அரசிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
புலிகளைப் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ள பிரித்தானியா, அவ்வியக்கத்திற்காக நிதி சேகரிப்பில் ஈடுபடும் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும்.
பிரித்தானியாவில் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றன. இந்த நிதி இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போர் மற்றும் பொது மக்கள் மீதான வன்முறை நடவடிக்கைகள் என்பனவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன், தமிழ் அமைப்பினர் என்ற போர்வையில் புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்ச்சி தொடர்பாகவும் பிரித்தானியா அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்படும் நிதி கடைசியில் புலிகளின் வலையமைப்பையே சென்றடைகின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.