ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் குழுவான யுஎன்எச்சிஆர் இலங்கையில் தனது செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் மனித உரிமைகள் சபைக் குழு இந்த ஆண்டில் தனது முதலாவது கூட்டத்தொடரை ஜெனீவாவில் கூட்டிய தருணத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பு இலங்கை, பர்மா, கொங்கோ ஆகிய நாடுகள் மீதான தமது நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். இந்த கூட்டத்தொடரில் பல தடவைகள் இலங்கை தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இலங்கையில் மிகவும் அதிகளவில் மக்கள் காணாமல் போய் உள்ளனர். எனவே ஐ.நாவின் மேற்பார்வையில் இலங்கையில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட வேண்டும். இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தினை ஒத்துழைக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஐ.நாவின் மனித உரிமைகள் சபை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை, சோமாலியா, பர்மா, கொங்கோ ஆகிய நாடுகளில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் உலகில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை ஐ.நா. புறக்கணித்து வருவதாகவே கொள்ள முடியும்.
மோதல்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஐ.நா. அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இரு தரப்பினரும் போர் தொடர்பான அடிப்படை விதிகளையே மீறி வருகின்றனர். அதற்கான விலைகளை இலங்கை மக்கள் செலுத்தி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.