சர்வகட்சிக் குழுவில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதாலேயே ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறார் என்று ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்திருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கு இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன்படி, நிலவும் இப்பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவும் சர்வகட்சிக் குழுவில் இணையுமாறு அழைப்பு விடுக்கவும் ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு) கட்சியினரை சர்வகட்சிக் குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு அக்கட்சி விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். எவ்வாறெனினும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளே சர்வகட்சிக் குழுவில் அங்கம் வகிக்க வேண்டும் எனவும், பிள்ளையான் குழு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையின் கீழ் நாடாளுமன்ற அங்கத்துவத்தை வகிக்காத ஏனைய அரசியல் கட்சிகளும் சர்வகட்சிக் குழுவில் அங்கத்துவம் கோரினால் சிக்கல் மிகுந்த நிலைமை உருவாகலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும், பிள்ளையான் குழுவினரால் சர்வகட்சிக் குழுவிற்காக நான்கு பிரதிநிதிகளை ஏற்கனவே தெரிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.