இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு மேன்மேலும் அதிகரிக்குமேயானால் அந்நாட்டுக்கு எதிராக ஜே.வி.பி. பாரிய நடவடிக்கைகளில் இறங்கும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
இந்தியாவின் தலையீட்டை வாபஸ் பெறக் கோரி இராஜதந்திர ரீதியாகவும், சட்டரீதியாகவும் நாட்டு மக்களை ஒன்றிணைத்த போராட்டங்கள் ஊடாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜே.வி.பி. அறிவித்துள்ளது.இது தொடர்பாக, ஜே.வி.பியின் எம்.பியும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ஆர்.சந்திரசேகரன் கூறியவை வருமாறு:
இலங்கைக்கு ஆயுதக் கலாசாரத்தைக் கொண்டுவந்ததே இந்தியாதான். அத்தகைய இந்தியா இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று இப்போது கூறுகின்றது.
இலங்கையில் சமாதான விடயத்திலும் பொருளாதார விடயத்திலும் இந்தியா அளவுக்கு அதிகமாகவே தலையிடுகிறது.
இந்தியா எமது நட்புறவு நாடு. எமக்கும் அந்த நாட்டுக்கும் நெருங்கிய கலாசாரத் தொடர்பும் உண்டு. ஆனால், இந்தியா போல் இலங்கையும் ஓர் இறைமையுள்ள நாடு என்பதை இந்தியா உணரவேண்டும். எனவே, இலங்கையின் உள்விவகாரங்களில் அளவுக்கு அதிகமாகத் தலையிடும் உரிமை இந்தியாவுக்குக் கிடையாது.
தலையிடத் தகுதி இல்லை புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா மேற்கொண்டுவரும் எத்தனங்கள் இலங்கைக்குப் பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.இந்தியாவின் காஷ்மீரில் இப்போதும் தீவிரவாதப் போராட்டம் நடைபெற்றுவருகின்றது. அந்தப் போராட்டத்தை ஒழித்துக்கட்ட இந்தியாவால் இன்னும் முடியவில்லை.
தனது உள்நாட்டுப் பிரச்சினையையே தீர்க்க முடியாத இந்தியாவால் எப்படி இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?அத்தகைய இந்தியாவுக்கு இலங்கை விவகாரத்தில் தலையிட எந்தத் தகுதியும் கிடையாது. இந்தியா தனது தலையீட்டை உடன் நிறுத்த வேண்டும்.
இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், மக்களை ஒன்றிணைத்த போராட்டங்கள் ஊடாகவும் நாம் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.