பிள்ளையான் குழு ஆயுதங்களுடன், பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலில் இறங்கியிருக்கிறது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
ராஜகிரியவில் நேற்று நடைபெற்ற மட்டக்களப்புத் தேர்தல் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:சுதந்திரமானதும் நியாயமானதுமான ஒரு தேர்தலை நடத்துவதற்குரிய பின்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. மட்டக்களப்பில் இன்றுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் அங்கு தேர்தல் நடத்துவதற்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோதே இது குறித்து அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். மட்டக்களப்பில் பல ஆயுதம் தரித்த குழுக்கள் செயல்படுகின்றன. பிள்ளையான் குழு துப்பாக்கியுடன் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து தேர்தலில் இறங்கியிருக்கிறது. அண்மைக்காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் கடத்தப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை இல்லை என்று அந்த மாவட்ட மக்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றனர் என்றார்.