|
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் யுஎன்எச்சிஆர் அமைப்பின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்காவில் காணாமல் போதல் மற்றும் கடத்தல்கள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கின்றது. யாழ். குடாநாட்டில் நடைபெறுவதனைத் தவிர அண்மையில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாகவும் நாம் கவலை அடைந்துள்ளோம். மக்கள் காணாமல் போவது நாடு முழுவதற்கும் பரவியுள்ளது. நாட்டில் அதிகளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்ற போதும் அச்சம் காரணமாக பலர் முறைப்பாடு செய்வதில்லை. மிக அவசரமான 37 முறைப்பாடுகளும், 107 சாதாரண முறைப்பாடுகளும் அண்மையில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முறைப்பாடுகள் கொழும்பில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனையவை யாழ். குடாநாட்டில் இருந்தும் ஏனைய வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிகளவான மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா இராணுவம், காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறையினரும், கருணா குழுவினரும் பெரும்பாலான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள். பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டணைகளில் இருந்து தப்பி விடுகின்றனர். ஆனால் அரசு அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது மிகவும் நீண்டதும், கடினமானதும் ஆகும். அங்கு நடைபெற்று வரும் விசாரணைகளில் உயர் அதிகாரிகளின் தடங்கல்களும், தலையீடுகளும் அதிகம். சில சமயங்களில் சாட்சியங்களுக்கு மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன. சிறிலங்காவிற்கு பயணம் செய்வதற்கு எமது அமைப்பு தீர்மானித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |