மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கான விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதே தவிர மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேராவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்;
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை இன்று மாலைவேளையில் கொண்டுவர இருந்தமையினால் மின்சக்தி அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் மாலைவேளையிலேயே சபைக்கு வருகைதரவிருந்தனர். இந்நிலையில் சபை நடவடிக்கைகள் குறுகிய நேரத்திற்குள் ஒத்திவைக்கப்பட்டமையினால் விடயம் தொடர்பான அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரினால் அந்த நேரத்திற்கு சபைக்கு சமுகமளிக்கமுடியவில்லை.
இந்நிலையிலேயே மேற்படி விடயத்திற்கு நான் பதிலளிக்கின்றேன். நுரைச்சோலை அனல் மின்நிலையத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினால் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதற்கு நானும் எதிர்ப்பு தெரிவித்தேன். எனினும் இந்த திட்டத்தினால் தளவில தேவாலயத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அறிக்கையிடப்பட்டதன் பின்னரே அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட்டோம். எனினும் இன்று ஐக்கிய தேசியக்கட்சி அரசியல் இலாபத்தை தேடிக்கொள்வதற்காக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. மடு தேவாலயத்திற்கு செல்ல முடியாத நிலையில் தலவில தேவாலயத்தையாவது பாதுகாப்போம் என்ற நோக்கிலேயே அன்று நாம் நுரைச்சோலை அனல் மின் திட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம்.
மின் உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டால் நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது,டீசல் விலையுடன் ஒப்பிடுகின்ற போது மின்சார கட்டணம் மிக மிக குறைவானது . நுரைச்சோலை, மேல்கொத்மலை மற்றும் இதர மின்சார உற்பத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மின்சார கட்டணங்கள் குறையும்.