யாழ். கொழும்பிற்கும் இடையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நோயாளர் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இச்சேவையின் மூலம் மேலதிக சிகிச்சை பெற வேண்டிய 9 நோயாளர்களும் 2 வைத்தியர்களும் 5 உதவியாளர்களும் கொழும்பை வந்தடைந்ததாக ஐ.சி.ஆர்.சி.யின் பேச்சாளர் அலெஸ்சாண்டிரா மற்றிஜெவிக் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் பெற முடியாத சத்திரசிகிச்சை, விசேட மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளர்களும் உள்ளக பயிற்சிகளுக்காக செல்லவேண்டிய மருத்துவ அதிகாரிகளுக்கும் நோயாளர் விமான சேவையை ஐ.சி.ஆர்.சி. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. முக்கியமான சில மருந்து பொருட்களும் இச்சேவை மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பயணிகளின் பாதுகாப்பு, விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள், பயண அனுமதி போன்ற காரணிகளால் ஐ.சி.ஆர்.சி. வழங்கி வந்த நோயாளர் விமான சேவை சிறிது காலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அலெஸ்சாண்டிரா மற்றிஜெவிக் மேலும் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஆரம்பமான நோயாளர் விமான சேவையானது, வாரத்திற்கு இருமுறை நடைபெறும் எனவும், இதற்காக பி1900 சிபீச் கிராப்ட் ரக விமானம் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.