கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற ஆயுத குழுக்களை நிராயுதபாணிகளாக்குமாறு பவ்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரித்து விட்டது. தேர்தலில் நடைபெறுகின்ற மோசடிகள் தொடர்பான அதிகாரம் அரசியலமைப்பு சபையினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவில்லை
என்பதனால் அவ்விடயத்தில் தலையிடுவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரித்து விட்டது.
கிழக்கு மாகாண ஆயுத குழுக்களை நிராயுதபாணிகளாக்குமாறு தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர்,பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 35 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு பவ்ரல் அமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்பையடுத்து அங்கு தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளன.ஆயுத குழுக்களை நிராயுதபாணிகளாக்காவிடின் தேர்தல் தினத்தன்று வன்முறைகள் அதிகரிக்ககூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள பவ்ரல் அமைப்பு தேர்தல்தினத்தன்று ஏற்படக்கூடிய வன்முறைகளை தடுத்துநிறுத்துவதற்கு மனுவின் பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது.