யாழ்நகர் நிருபர் யாழ்.குடாநாட்டில் நிலவும் மிக மோசமான பாதுகாப்புச் சூழ்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில் கலாசார சீரழிவு குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
சாவகச்சேரி மற்றம் பண்டத்தரிப்பு பகுதிகளைச் சேர்ந்த இரு பாடசலைச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் கருக்கலைப்பு செய்ய முயன்ற போது உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் கடந்த சில வாரங்களில் இடம்பெற்றுள்ளன.
இதேநேரம், 13 வயதே நிறைந்த பாடசாலைச் சிறுமியொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட நீதிமன்றங்கள் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளபோதும் குற்றவாளிகள் இதுவரை பிடிபடவில்லை.
இவை தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
வட்டுக்கோட்டை மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளில் 15 வயதிற்கும் குறைவான இரு சிறுமியர் கடந்த மாத பிற்பகுதியில் சட்டவிரோதக் கருக்கலைப்புக்குட்படுத்தப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சிறுமியரில் ஒருவர் பண்டத்தரிப்பு பகுதியில் முன்னணிப் பாடசாலையொன்றின் மாணவியாவார்.
இந்த மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த நிலையிலேயே கருக்கலைப்புக்குட்படுத்தப்பட்டபோது உயிரியந்துள்ளார்.
இவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவரை உடனடியாக கண்டு பிடித்து நீதிமன்றில் நிறுத்துமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் பாலியல் வல்லுறவின் பின்னரான கருக்கலைப்பின் போது உயிரிழந்த மற்றைய பாடசாலைச் சிறுமி சாவகச்சேரியைச் சேர்ந்தவர்.
இவர் கருக்கலைப்புச் செய்வதற்காக வட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த போதே, மரணமடைந்துள்ளார். இந்தச் சிறுமியை இவரது உறவினர் ஒருவரே வல்லுறவுக்குட்படுத்தியநிலையில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற வேறுசில வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வலிகாமம் பகுதியில் 13 வயது பாடசாலைச் சிறுமியொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். இந்தச் சிறுமி பிரசவித்த குழந்தை நீதிமன்றின் உத்தரவின் பேரில் சிறுவர் பாதுகாப்பு இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குடாநாட்டில் தற்போது தோன்றியுள்ள இந்த நிலைமை குறித்து பொது அமைப்புக்கள் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் தெரிவித்துள்ளன.