இலங்கையில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் புலம் பெயர்ந்துவிட்டதாக, அந்த நாட்டைச் சேர்ந்த தமிழ்க் கவிஞரும் கனடா நாட்டு "வின்ஸர்' பல்கலைக்கழகப் பேராசிரியருமான சேரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறை சார்பில் "எட்டுத் திக்கும் எம் தமிழர்' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் சேரன் பேசியதாவது:
யாழ்ப்பாணத்தில் இருந்து 1987-ம் ஆண்டு நான் புலம்பெயர்ந்தேன். அப்போது இலங்கை -இந்திய அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, அங்கு நிறைய துயர சம்பவங்கள் நடந்தேறின.
புலம்பெயர்வு என்பது தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, தமிழகத்தில் இருந்து தமிழர்களை பிஜி தீவு, மோரீஷஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்கு தோட்ட வேலைகளுக்கு அடிமைகளாக ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர், நாடு சுதந்திரமடைந்த பிறகு சாதிய ஒடுக்குமுறைகளாலும், பின்னர் மத ஒடுக்குமுறைகளால் மக்கள் புலம்பெயர்ந்தனர்.
1948-க்குப் பிறகு இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன; அடக்குமுறை கையாளப்பட்டது. மெல்ல மெல்ல தமிழர்களை இலங்கை அரசு கொடுமைப்படுத்தத் தொடங்கியது. 1983-ல் இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த இனப் படுகொலைக்கு பின்னர் தமிழர்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து புலம்பெயரத் தொடங்கினர். இவ்வாறு 9 லட்சம் தமிழர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுக்கான புகலிடத்தைச் சேருவதற்கு 3 ஆண்டுகள்கூட ஆனது. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்தனர். ஆனால், இங்குள்ள சில ஊடகங்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் மிகவும் நன்றாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அகதிகளாகச் சென்ற தமிழர்கள் மிகுந்த நெருக்கடியான நிலையிலேயே உள்ளனர் என்றார்.