கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அவசரகாலச் சட்டமனது தமிழ் மக்களின் குரலை நசுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்தச் சட்டம் செயற்படுத்தப்படுவதனால் நாம் ஒவ்வொரு முறையும் எதிர்க்கின்றோம்.
குண்டு வீச்சுக்களால் யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்ட மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவே சுட்டிக் காட்டியிருக்கின்றார். விமானக் குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதல்களையே அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இவரது இந்தக் கருத்து ஒரு தீர்ப்பு போன்றது. இந்தக் குண்டு வீச்சுத் தாக்குதல் சத்தங்களால் யாழ்ப்பாணத்தில் வெளவால்களுக்கு கூட வாழ முடியாதுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இதன் விளைவுகளை உணர்ந்தே அவர் பேசியிருக்கின்றார் என்று நான் நினைக்கிறேன்.
குண்டு வீச்சு சத்தங்களை பற்றி பேசியிருக்கின்ற பிரதம நீதியரசர், அதன் விளைவுகள் பற்றியும் பேச வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்ற அசட்டுத் தனமான எண்ணத்துடன் அரசாங்கம் கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி வருகின்றது. கிழக்கு மாகாண மக்களின் அபிமானத்தைப்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பதனால் அந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற முடியுமென்ற நப்பாசையுடன் அரசாங்கம் அங்குள்ள ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.