சிவராத்திரி தினத்தில் இந்து மத பக்தர்கள் ஏற்றும் ஒவ்வொரு விளக்கும் ஆன்மீகரீதியாக அவர்களை வளப்படுத்தி, எமது நாட்டின் அனைத்து மக்களுக்கிடையிலும் சிறந்த புரிந்துணர்வு, பலமான ஐக்கியம் என்பவற்றுக்கான தேவையை மேலும் வலுப்படுத்தட்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் குறிப்பி;ட்டுள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்துக்கள் இன்று சிவராத்திரி தினத்தை பக்திப்பரவசத்துடன் அனுஷ்டிக்கின்றனர். இப்பண்டிகை சிவபெருமானை கௌரவிப்பதற்காகவும் சிவபெருமான் பார்வதி அம்மையாரை மணந்த தினத்தையும் அவரினால் ஆதி நடனக் கலையின் உருவாக்கம், பேணுதல் என்பவை அறிமுகப்படுத்தப்பட்ட இரவை நினைவு கூரவும் அனுஷ்டிக்கப்படுவதாக நம்பப்படுகின்றது.
இப்பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு கிரியைகளில் விரதம் அனுஷ்டித்தல், கோயிலில் இரவில் விழித்திருத்தல், தானம் வழங்குதல், விளக்கேற்றல், சிவபெருமானைப் புகழ்ந்து தேவாரம் பாடுதல் போன்றவையும் அடங்குகின்றன.
அறியாமையை அகற்றி ஞானத்தைத் தேடுதலும் காமம், கோபம். பேராசை, பொறாமை, குரோதம் மற்றும் மோகம் போன்ற தீய குணங்களை வெற்றிகொண்டு தமது வாழ்விலும் சமூகத்திலும் அமைதியையும் நட்புறவையும் வேண்டுவதாகும்.
உலகில் பழைமை வாய்ந்த மதங்களில் ஒன்றான இந்து மதம் மனிதனுக்கு பக்தி ஒழுக்கங்கள், ஐக்கியம் மற்றும் இன ஒற்றுமை என்பவற்றைப் போதனை செய்கின்றது. எமது நாட்டிலும் இந்துக்கள் தமது மதத்துக்கு ஏற்ப ஏனைய மதங்களைப் பின்பற்றுவோருடன் பல வருடங்களாக ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை வாழ் அனைத்து இந்து மத பக்தர்களுக்கும் இன்றைய இப்புனித தினத்தில் சிவராத்திரியை பக்திப்பரவசத்துடன் அனுஷ்டிக்க நான் ஆசிக்கிறேன். சிறந்த நாளையொன்றுக்கான அவர்களது பிரார்த்தனைகளும் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறவும் இத்தினத்தில் நான் வாழ்த்துகிறேன்.(