புலிகளின் தலைவர் பிரபாகரன் அரச விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலால் காயமடைந்தார் எனக் கூறப்படுவது அரசின் பொய்யான அறிவிப்பு என்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழீழத்தை நல்ல முறையில் நிர்வகித்து வருகின்றார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
ஆழ ஊடுருவித்தாக்கும் படையினரின் தாக்குதல்களால் வடக்கில் எமது மக்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர்.
விமானத்தாக்குதலாலும், கிளைமோர் தாக்குல்களாலும் எமது மக்கள் கொல்லப்படுகின்றனர்.
அரச படையினரும் துணைப் படையினரும் ஒன்றிணைந்து கடத்தல், கொலை மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அவர்கள் உடன் நிறுத்தவேண்டும்.
எமது தேசியத் தலைவர் பிரபாகரன் விமானத் தாக்குதலில் காயமடைந்தார் என்று அரசு மக்களிடையே பொய் கூறிக்கொண்டு திரிகின்றது. அது முற்றிலும் பொய்.
பிரபாகரன் எந்தத் தாக்குதலிலும் காயமடையவில்லை. அவர் மிகவும் நலமாக இருக்கின்றார். அவர் மிகவும் திறமையாக எமது பிரதேசத்தை நிர்வகித்து வருகின்றார். அரசு இவ்வாறு பொய் கூறுவதையும் எமது மக்களைக் கொன்றொழிப்பதையும் உடன் நிறுத்த வேண்டும்.
எமது தமிழீழக் கொள்கையை இந்த அரசு ஏற்று நாம் பிரிந்து சென்று நிம்மதியாக வாழ எம்மை அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாது தொடர்ந்தும் எமது மக்களைக் கொன்றொழிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் நாம் தனியாகப் பிரிந்து சென்று தமிழீழத்தை அமைப்போம்.
படையினர் இப்போது மன்னாரைக் கைப்பற்ற முனைகின்றனர். அவர்களால் அதைப் பிடிக்க முடியாதுள்ளது.
அவர்கள் பெரும் அழிவை எதிர்நோக்கி வருகின்றனர். 10 மீற்றர் நிலத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் அவர்கள் தடுமாறுகின்றனர். படையினரின் அந்த முயற்சி வெற்றி பெறாது.
அரசு இப்போது வன்னியில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. வடக்குக்கு உணவுப்பொருள்களைக் கொண்டு செல்லவிடாது படையினர் தடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் உள்ள வைத்தியசாலைக்கான மின்சாரத்தை மூன்றில் இரண்டு பங்காக அரசு மட்டுப்படுத்தியுள்ளது. இதனால், தொடர்ந்தும் குளிரூட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய மருந்துப் பொருள்கள் பழுதடைகின்றன.
அரசு இவ்வாறான நடவடிக்கைகளையெல்லாம் நிறுத்தி எமது மக்களை வாழவிடவேண்டும். என்றார்.