கொழும்பு நகரில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் காந்தங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொருத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வுத் தகவல்கள் மூலம் அரசுக்குத் தெரியவந்துள்ளது. இது குறித்து வாகன உரிமையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுக் காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியவை வருமாறு:எந்தவகையிலாவது கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த புலிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். படையினர் அண்மையில் கொழும்பில் நடத்திய தேடுதலின்போது காந்தங்கள் பொருத்தப்பட்ட சிறியரகக் குண்டுகள் மீட்கப்பட்டன.
இவ்வாறான குண்டுகளை அவர்கள் கொழும்பில் தனியான இடங்களில் நிறுத்திவைக்கும் வாகனங்களில் மிக இலகுவாகப் பொருத்திவிடமுடியும். எனவே, கொழும்பில் தனியான இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்கள் தமது வாகனத்தை மீண்டும் இயக்க முன்னர் அதனை நன்கு பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன், மின்மாற்றிகளில் குண்டுகளைப் பொருத்தும் நடவடிக்கைகளிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்திலேயே இவ்வாறான முயற்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களில் புத்தளம் பிரதேசத்தில் 6 குண்டுகள் மின்மாற்றிகளில் புலிகளால்பொருத்தப்பட்டன. அவற்றில் இரண்டு குண்டுகள் வெடித்தன. ஏனைய நான்கு குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மின் மாற்றிகள் வெடித்துச் சிதறினால் இருளில் மூழ்கி அவதிப்பட வேண்டியது அப்பாவிப் பொதுமக்களே. எனவே, இவ்வாறான நாசகாரச் செயல்கள் நடைபெறுவதைத்தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.