தனக்கு அடிபணியும் புலிகளை வளர்த்து விடுவதற்கு 13 ஆவது திருத்தத்தை அமு லாக்குவதற்கு இந்தியா இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கிறது.அவசர காலச்சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
1987இல் இந்தியா இலங்கையை ஆக்கிரமித்தது. அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியாவிடம் மண்டியிட்டார்.இந்த ஆக்கிரமிப்பைத் தொடர்ந்துதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் காரணமாகவே வடமராட்சி நோக்கிய வெற்றிகர இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. இந்தியா அப்போது இலங்கையை ஆக்கிரமித்திருக்காவிட்டால் 1987 இலேயே புலிகளை இலங்கை இராணுவத்தினர் தோற்கடித்திருப்பர். அப்போதே யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும்.
இப்போது 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவே இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் ராஜீவ் காந்தியின் பெரும் சூழ்ச்சியாகும். வரதராஜப் பெருமாள் போன்ற தனக்கு அடிபணியும் புலிகளை அதிகாரத்துக்கு நியமிப்பதே இந்தியாவின் நோக்கம்.இந்தியாவின் இந்த சூழ்ச்சிக்குத் தலையாட்டும் பொம்மையாக இருக்க எமது நாட்டில் இப்போது சிலர் தயாராகவேயுள்ளனர்.
தேசியப் பாதுகாப்பு என்பது பிரபாகரனுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை மாத்திரமல்ல. இவ்வாறான சர்வதேச சதிகளை முறியடிப்பதும் தான் என்பதை இலங்கை அரசு தெரிந்துகொள்ளவேண்டும் என்றார்.