அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலமாகிய திருக்கேதீஸ்வரத்தில் இந்துக்களின் முக்கிய விழாவாகிய சிவராத்திரியை, அந்த ஆலயத்தில் இரவு தங்கியிருந்து இரவு பூஜைகளை தரிசிப்பதற்கு இந்து பக்தர்களுக்கு இராணுவம் அனுமதி வழங்கியிருப்பதாக அந்த ஆலயத்தின் திருப்பணிச்சபையினர் தெரிவித்துள்ளனர்.
சிவராத்திரியை முன்னிட்டு இன்றும் நாளையும் திருக்கேதீஸ்வரத்திற்குப் பகல் வேளையில் பக்தர்கள் சென்று வரலாம் என்றும், அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் இராணுவ அதிகாரிகளும், மன்னார் மாவட்ட அரச அதிகாரிகளும் தெரிவித்திருப்பதாக ஆலயத் திருப்பணிச் சபையின் செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரத்திற்கு அப்பால் அமைந்துள்ள இராணுவத்தின் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அண்மைக் காலமாகத் தொடரும் மோதல்களில் எழும் வெடிச் சத்தங்கள் ஆலயம் வரையில் கேட்பதாகவும், எனினும் ஆலயச் சூழலில் உள்ளவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் திருநாவுக்கரசு அறிவித்துள்ளார்.