சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் (வயது 51) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சிவநேசன் திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மாங்குளத்திற்கு தெற்காக 2 கிலோமீற்றர் தொலைவிலும் ஓமந்தையில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் சிவநேசன் மற்றும் அவரது ஓட்டுநரான மல்லாவியைச் சேர்ந்த பெரியண்ணன் மகேஸ்வரராஜா (வயது 26) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் நாள் சிவநேசன் பிறந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக 2004 ஆம் ஆண்டு அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிவநேசனை மதவாச்சியில் உள்ள சோதனை நிலையத்தில் சிறிலங்கா படையினர் வழிமறித்து அச்சுறுத்தியிருந்தனர். இது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், தனது நாடாளுமன்ற பதவிக்குரிய சிறப்புரிமையை மீறும் வகையில் படையினர் செயற்பட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்திருந்த சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இத்தகைய சோதனைகளுக்கு வன்னியிலிருந்து வரும் எவரும் முகம் கொடுத்தே ஆக வேண்டும். யாருக்காகவும் இச்சோதனைகளை நிறுத்தமாட்டோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுவிட்டுத் இன்று வீடு திரும்பும்போது இக்கிளைமோர் தாக்குதலை சிறிலங்கா அரசாங்கம் நடத்தியுள்ளது.