ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் பிரிவினை வாதத்திற்கு தூண்டுதலான பொய்க் கருத்துக்களின் அடிப்படையிலேயே இன்று கொசோவோ தனிநாடானது. இதேபோன்றதோர் நிலையை எமது தாயக பூமியிலும் தோற்றுவிக்க அவர் அரும்பாடுபட்டு வருகிறார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கையிலும் ஒரு பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறான பயங்கர சூழலை எதிர்கொண்டவர்களாக நாம் இருக்கின்றோம் என்றும் அவர் சொன்னார்.
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மின்சார குமிழ் அமைந்த பாடசாலை மேசைகள் வழங்கும் வைபவம் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
ஜே.வி.பி.யின் மற்றுமொரு அமைப்பான நீலோற்பல மலர் இயக்கம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இயக்கதின் அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர, சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.