இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மதிப்பதாக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய அமைச்சர் மலோச் பிரௌண் ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை இலங்கையில் நிறுவும் லூயிஸ் ஆர்பரின் யோசனையை தாம் ஆதரிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.வின் மனித உரிமை கவுன்ஸிலின் 7ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் உரையாற்றியபோதே ஆசியா, ஆபிரிக்கா, ஐ.நா. விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மலோச் பிரௌன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவ்வுரையில் அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதை நாம் அறிவோம். எனினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகளை மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். இலங்கையில் ஆட்கள் காணாமல்போதல், நீதிக்கு புறம்பான படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், சட்டம் ஒழுங்கில் காணப்பட்ட குறைபாட்டையும், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்வதையும் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விடயத்தில் இலங்கையின் மனித உரிமை அமைப்புக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
அவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்படுவதோடு, தேவையான வளங்களையும் வழங்க வேண்டும்.இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை நிறுவும் லூயிஸ் ஆர்பரின் யோசனைக்கு பிரித்தானியா ஆதரவளிக்கிறது. அதேவேளை, இலங்கையில் மனித உரிமைகளின் நிலை மேம்பாடடைய அரசாங்கத்துக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.