இலங்கையில் பரவலாக இடம்பெறும் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான ஹியுமன் ரைட்ஸ் வோச் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா.வின் கீழான சர்வதேச குழுவொன்றின் பிரசன்னம் அவசியம் என்றும் அது மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் ஹியுமன் ரைட்ஸ் வோச் நேற்று வெளியிட்டுள்ள 241 பக்க அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமான கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ஆயுதக் குழுக்களினால் நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளனர். சர்வதேச சட்டத்தின்கீழ் ஒரு நபரை கைது செய்து அவரது கைதை மறுக்கும் போதும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தை மறைக்கும் போதும் பலவந்தமான காணாமல் போதல் இடம் பெறுகின்றது.
காணாமல் போதலானது பொதுவாக சித்திரவதை, நீதிக்குபுறம்பான கொலையை மேற்கொள்வதற்காகவே இடம் பெறுகின்றது. இதனால் குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் நிர்க்கதிக்கு ஆளாகின்றனர்.
இலங்கையில் பலவந்தமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பெரும்பாலான சம்பவங்களில் இராணுவம் கடற்படை பொலிஸாரின் பங்குபற்றுதல் இருப்பது புலனாகியுள்ளது.
இதில் சில சம்பவங்களில் விசேஷட இராணுவ பிரிவினராலேயே குறிப்பிட்ட நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிலசந்தர்ப்பங்களில் சீருடை அணிந்த பொலிஸாரும் குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரே குறித்த நபர்களை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் பலவந்தமான காணாமல் போதலை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதோடு இது தொடர்பான முறைப்பாடுகளை உரியமுறையில் மேற்கொள்ளவேண்டும்.
காணாமல் போதலை தடுப்பதற்கு குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு அனுமதிக்காமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்தியாவும், ஜப்பானும் இலங்கைக்கான இராணுவ மற்றும் ஏனைய மனித நேய உதவிகளை வழங்கவேண்டும்.