யாழ் குடாநாட்டில் மக்கள் சனத்தொகை கடந்த 20 வருட காலப்பகுதியில் 30 சதவீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தில் மட்டுமே இந்தளவு சனத்தொகை வீழ்ச்சி காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
1981 இல் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி 7 இலட்சத்து 39 ஆயிரத்து 798 பேர் அங்கு வசித்ததாகச் சுட்டிக்காட்டும் அவர், 2001 இல் இந்தத் தொகை 4 இலட்சத்து 90 ஆயிரத்து 621 ஆகக் குறைந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.
இந்த நிலையில், யாழ் குடாநாட்டில் குடிசன மதிப்பீட்டுப் பணிகள் படையினரின் வழிநடத்தலின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது யாழ் சனத்தொகையைக் குறைத்துக்காட்டும் ஒரு முயற்சி என்று குற்றஞ்சாட்டி இதனை நிறுத்துமாறு சங்கிலியன் படை என்ற பெயரில் எச்சரிக்கைப் பிரசுரம் வெளியிடப்பட்ட நிலையிலும், குடிசன மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுப்பதில் படைத்தரப்பு தீவிர அக்கறை காட்டி வருகிறது.
1990 களில் யாழ் குடாநாட்டின் வலிகாமம் பிரதேசம் மற்றும் தீவகப் பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியபோது அந்தப் பகுதி மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் யாழ் நகரின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறியபோதிலும், இன்னொரு பகுதியினர் தென் பகுதிக்குச் சென்றதுடன், சிலர் நாட்டை விட்டே புலம்பெயர்ந்துவிட்டனர்.
தொடர்ந்து 1995 இல் ஏற்பட்ட பாரிய யாழ் இடப்பெயர்வின் பின்னர் பெருந்தொகையானோர் யாழ்ப்பாணத்தை விட்டு தென் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததுடன், இவர்களிலும் ஒரு பகுதியினர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.
1995 முதல் யாழ் குடாநாட்டில் காணப்பட்டுவரும் மோசமான இராணுவச் சூழ்நிலை இடையில் 2002 இல் போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட பின்னர் ஓரளவு சீராக இருந்தபோதிலும், 2005 பிற்பகுதியிலிருந்து முன்னெப்போதும் இருந்திராதளவு மோசமான நிலைமைகளுக்கு யாழ்ப்பாணம் முகம்கொடுத்து வருகிறது. கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல்போகும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்தையடுத்து பெருந்தொகையானோர் யாழ்ப்பாணத்தை விட்டு இப்போதும் தொடர்ச்சியாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
இன்று இலங்கையைவிட்டு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள சுமார் 5 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே என்று பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிடுகிறார்