மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய வேண்டும் என்று தெரிவித்துள்ள தேர்தல் திணைக்களம் மேற்படி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அரசுடன் கைகோர்த்து தேர்தலில் போட்டியிடும் பிள்ளையான் குழுவுமே அதிகளவான பிரசாரங்களை மட்டக்களப்பில் மேற்கொண்டுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சின்னமான வெற்றிலைச் சின்னமும் பிள்ளையான் குழுவின் சின்னமான வள்ளமும் வீதிகளில் பதாகைகளாக தொங்க விடப்பட்டுள்ளன. பிள்ளையான் குழுவினர் வீடு வீடாகச் சென்று தமக்கு வாக்களிக்காது விடின் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகின்றனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டங்களை நடத்தி வருகின்றபோதும் அந்த கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதாகைகள் அரிதாகவே காணப்படுகின்றன.
அதேநேரம் சுயேட்சைக்குழுக்கள் இம்முறை தேர்தல் பிரசாரத்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுள்ளது. இது குறித்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
இதேவேளை உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு அங்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பிற்கு வசதியாக இன்று முதல் மட்டு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படும் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் நாள் வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் மாநகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளுக்காக நடைபெறுகின்ற இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 6 கட்சிகளும், 22 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.