போரில் கொல்லப்படும் இராணுவ வீரர்கள் குறித்த சரியான தரவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில்லையென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்நாட்டு மக்களுக்கு உண்மையை அறிய உரிமையுண்டு. எனினும், போரில் கொல்லப்படுபவர்கள் பற்றிய சரியான தரவுகள் இச்சபையில் சொல்லப்படுவதில்லை. ஒவ்வொரு படைத்துறை சார்ந்த தரப்பும் ஒவ்வொரு விதமான வேறுபட்ட எண்ணிக்கையை போரில் கொல்லப்பட்ட முப்படையினரின் எண்ணிக்கையாகக் கூறுகின்றன. எனினும், உண்மை விபரங்கள் எம்மிடமுண்டு.
கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றிய படையதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்கள் தமது பாதுகாப்புக்காக நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.
இந்நாட்டு மக்கள் இராணுவ வீரர்களை மதிக்கின்றனர். எனினும், அவர்கள் அரசியல்வாதிகளின் பணிகளை செய்யக்கூடாது. விமானப்படைத் தளபதியின் குடும்பம் இந்நாட்டுக்காக பெரும் தியாகங்களைச் செய்துள்ளது. எனினும், பிரபாகரன் கொல்லப்பட்டால் பயங்கரவாதம் அழிந்துவிடுமென அவர் கூறுவது வேடிக்கையானது. படையதிகாரிகள் பொறுப்புடன் கருத்துகளை வெளியிடுவது அவசியமாகும்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகச் செயற்பட்டபோதே புலிகளுக்குள் பிளவு ஏற்படுத்தப்பட்டது என்பதை இச்சபையில் ஐ.தே.க. பெருமையாகக் கூறுகிறது.