தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கி.சிவனேசன் அவர்கள் கடந்த 06.03.2008 வியாழன் அன்று மாங்குளத்திற்கு அண்மையில் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்திகேட்டு பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்துள்ளோம்.
இப்படுகொலையை நெதர்லாந்து தமிழ்அமைப்புக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசபடையினராலும் அரசதுணைக்குழுக்களாலும் அச்சுறுத்தல்கள் இருந்ததனால் இவர் வன்னியில் மல்லாவியில் தனது மனைவி, பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார்.
நடாளுமன்ற அவசரகால நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்துவிட்டு மல்லாவிக்கு சென்றுகொண்டிருந்தபோதே இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்ற ஆண்டும் இதே இடத்தில் கிளைமோர் தாக்குதலிலிருந்து இவர் உயிர் தப்பியிருந்தார்.
இச்சம்பவம், சிறீலங்கா இராணுவத்தின் ஆழஊடுறுவி தாக்கியழிக்கும் அணியினரால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளதாக நம்பவேண்டியுள்ளது. ஏனென்றால், வன்னிக்கான ஓமந்தைப்பாதை திறக்கப்பட்டு மக்கள் பலவாகனங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் அவ்வேளையில் இவரின் வாகனம் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இப்படியாக திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் திரு.யோசெப் பரராஜசிங்கம், கொழும்பில் திரு. ரவிராஜ் நடராஜா, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.சந்திரநேரு, திரு.சிவமகராசா, திருகோணமலையில் தேசியப்பட்டியல் வேட்பாளர் திரு.விக்கினேஸ்வரன் ஆகியோர் இதற்கு முன்னரும் திட்டமிட்டவகையில் சிறீலங்கா அரசால் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ்இனத்தின் உரிமைக்காக குரல்கொடுத்துவருகின்ற தமிழ்த்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசால் திட்டமிட்;டவகையில் படுகொலைசெய்யப்பட்டுவருவதானது, அங்கு வாழும் சாதாரண தமிழ்மக்களிற்கு மேலும் பயத்தினையும், இனிமேல் சிங்கள அரசின்கீழ் தமதுஉரிமைகளைப்பெற்று நிம்மதியாக வாழமுடியாது என்ற நிலையினையும் தோற்றுவித்துள்ளது.
தமிழ்மக்களின் உயிர்களை தனதுஇராணுவபலம்கொண்டு அழித்தும் அடக்கியும் ஒடுக்கியும் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழுகின்ற உரிமைகளை மறுத்தும் வருகின்ற சிறீலங்காஅரசிற்கு எதிராக, தனது மக்களிற்காக தனது இறுதிமூச்சுவரை சனநாயக வழியில் உழைத்த திரு.கி.சிவனேசன் அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது ஆகும்.
அன்னாரின் இழப்பால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்களின் துயரத்தில் நெதர்லாந்துவாழ் தமிழ்மக்களின்சார்பில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். இவ்உறவுகளிற்கு எமது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.