கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரும் அவரது சகோதரியொருவரும் நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பு குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அச்சகம் ஒன்றை நடத்திவரும் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதேசத்தை சேர்ந்த வெற்றிவேல் ஜசிகரன் மற்றும் அவரது சகோதரியான வெற்றிவேல் வளர்மதி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிவேல் ஜசிகரன்; முன்னர் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகை நிருபராகவும் பின்னர் சரிநிகர் பத்திரிகை நிருபராகவும் கடமையாற்றியதுடன் சுதந்திர ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவந்தார்.
இந்தவேளையில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்துவரும் இவர் கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியில் அச்சகம் ஒன்றையும் நடத்திவருகின்றார்.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை இவரின் கைதுதொடர்பாக அறிவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் சென்ற ஜசிகரன் நண்பரும் ‘சன்டே ரைம்ஸ்’ பத்தி ஊடகவியலாளருமான ஜே.எஸ.திஸாநாகம் என்பரையும் குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெய்லி மிரர் பத்திரிகையின் முழு நேர பத்திரிகையாளராக கடமையாற்றும் இவர் ‘சன்டே ரைம்ஸ்’ பத்தி எழுத்தாளராக் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.