தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கி.சிவனேசன் மார்ச் ஆறாம் திகதி நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கேட்டு சுவிஸ் தமிழர் பேரவை ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்தக் கொலையைப் புரிந்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே அன்றி வேறெவரும் இல்லை. இவர் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுள்ளார்:
ஏனெனில், தாக்குதல் வேளையில் வேறு வாகனங்களும் ஏ-9 வீதியில் பயணித்துள்ளன.
திரு.சிவனேசன் அவர்கள் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. மாறாக அவர் ஒரு சமூக சேவகர் ஆவார். பனம்பொருள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அவர் நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார். இவரின் நீண்டகால சேவையே அவருக்கு 2004 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுத் தந்தது.
தனது குறுகிய சேவைக் காலத்தில் அவர் தனது தொகுதி மக்களுக்கு நிறைந்த சேவையை வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், அபிப்பிராயங்களை உருவாக்குவோர், மனித உரிமைகள் ஆர்வலர்கள் என முன்னணித் தமிழர்களைக் கொல்வதென்பது சிறிலங்கா மோதலில் புதிய விடயமல்ல.
ஏலவே, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. யோசப் பரராஜசிங்கம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ந.ரவிராஜ், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தி. மகேஸ்வரன் ஆகியோர் சிறிலங்கா ஆயுதப் படையினராலேயோ அவர்களுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக் குழுவினராலேயோ கொல்லப்பட்டுள்ளனர்.
இது தவிர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. அ. சந்திரநேரு (அம்பாறை மாவட்டம்), திரு. க. சிவமகாராஜா (யாழ் மாவட்டம்) ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.