இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து வியாழக்கிழமை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் சர்வதேச சுயாதீனப் பிரமுகர்கள் குழுவும் விடுத்துள்ள அறிக்கைகளை இலங்கை அரச அதிகாரிகள் நிராகரித்துள்ள போதிலும், அரசுக்கு இவற்றினால் கடும் அழுத்தம் ஏற்படலாம் என சர்வதேச அவதானிகள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.
மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து இடம்பெறும் ஆணைக்குழு விசாரணையைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து சர்வதேச,சுயாதீனப் பிரமுகர்கள் குழு விலகிக் கொண்டுள்ளமையும்
இலங்கை நிலைவரம் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று முன்தினம் வெளியிட்ட மிகக் காட்டமான அறிக்கையும் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசு கடந்த காலத்தில் இவ்வாறான வேண்டுகோளை நிராகரித்து வந்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக பல ஆணைக் குழுக்களை விசாரணைகளுக்காக ஏற்படுத்தி நிலைமையைச் சமாளிக்க முற்பட்டு வந்திருக்கிறது.
பதினாறு முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சுயாதீனப் பிரமுகர்கள் அணியை ஏற்படுத்தியிருந்தார். குறிப்பிட்ட குழு நீண்ட காலமாக ஜனாதிபதி ஆணைக்குழுவையும், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தையும் செயற்றிறனின்மை மற்றும் தவறான தலையீடுகள் தொடர்பாகக் குற்றம் சுமத்திவந்தது.இந்நிலையில், தனது பணியிலிருந்து விலகியுள்ளதாக அந்த அணி தெரிவித்துள்ளமை அரசின் பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேற்படி சர்வதேசப் பிரமுகர்கள் அணி இலங்கையின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் கண்டனங்களை ஊக்குவிப்பதற்கும் முயற்சிப்பதாக இலங்கையின் சட்டமா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ மேற்படி விசாரணைக் கண்காணிப்புக்கு புதிய சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கக் கூடும் என்றும் சட்டமா அதிபர் கோடிகாட்டியிருக்கின்றார். சர்வதேச சுயாதீனப் பிரமுகர்கள் அணி தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிக்கும் அதே சமயத்தில், இலங்கைக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடும் குற்றச்சாட்டு அறிக்கையும் வெளியாகியுள்ளது.எனினும் அரசு, இந்த அறிக்கையில் உள்ளவை மிகைப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் எனத் தெரிவித்து அவற்றை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார்.
"குறிப்பிட்ட அறிக்கையில் இலங்கையில் நிமிடத்திற்கு நிமிடம் மோசமடையும் சூழ்நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் இது நேர்மையற்றதெனவும் விசமத்தனமான தென்றும் கருதுகிறேன். என பாலித கோஹண குறிப்பிட்டுள்ளார்."இவை உண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் அல்ல. எம்மைப் பொறுத்தவரை திட்டமிடப்பட்டவை அல்லது இலங்கைக்கு மோசமான பெயரை ஏற்படுத்துவதற்கான நோக்கில் மிகைப்படுத்தப்பட்டவை என நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் கடந்த ஒரு வருட கால பகுதியில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, சர்வதேச சுயாதீனப் பிரமுகர்கள் அணி, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய இரண்டுமே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தொடர் இடம்பெறும்வேளை இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டமை திட்டமிடப்பட்ட உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என இலங்கை சமாதான செயலகம் குற்றம் சாட்டியுள்ளது.