நாட்டின் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த இரகசியத் தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும். இதனைத் தவிர வேறு எந்தச் செய்தியையும், வெளியிட ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
இவ்வாறு தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருக்கிறார். நேற்றுக்காலை கொழும்பில் அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத்தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:ஜனநாயகத்தின் சின்னமான ஊடக சுதந்திரத்தை நாட்டில் வளர்க்கவே அரசு விரும்புகிறது.
அதனை ஒடுக்குவதற்கல்ல உலகில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. இவ்வாறானதொரு நிலையில் ஊடகவியலாளர்களும் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகின்றனர். தனிப்பட்ட சிலர் சுயலாபம் தேடி இந்தப் பிரச்சினைகளை பூதாகரமாக்க முயற்சிக்கின்றனர். அரசு ஒருபோதும் ஊடகங்களுக்குள்ள விமர்சிக்கும் உரிமையையோ, பதிலளிக்கும் உரிமையையோ நசுக்கவில்லை.
நாட்டின் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த இரகசியத் தகவல்களை வெளிப்படுத்துவதிலிருந்து ஊடகங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். இது தவிர எந்த செய்தியையும் வெளியிட ஊடகங்களுக்கு யாரும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.
தொழிற்சங்கங்கள் கூட இன்று அவர்களது கோரிக்கைகளை ஊடகங்களின் ஊடாகவே வெளிப்படுத்துகின்றன. எமது நாட்டில் இன்று இணையத்தளங்கள் அதிகரித்துள்ளன.ஒவ்வொரு நாளும் எமது நாட்டின் செய்தி ஊடகங்களைப் பார்த்தால் அரசுக்கு எதிரான செய்திகளையே அதிகம் காணக்கூடியதாக உள்ளன. இது இலங்கையின் ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கே அதற்குப் புதிய பதில் தலைவர் ஒருவரை நியமித்தோம். கூட்டுத்தாபனம் ஒன்றுக்கு தலைவரை நியமிக்கும் அதிகாரம் அது சார்ந்த அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. தலைவர் ஒருவரை நியமிக்க அதிகாரம் உண்டு என்றால், இருக்கின்ற ஒருவரை பதவி நீக்கும் அதிகாரமும் அமைச்சுக்கு இருக்கவே செய்கின்றது. பதவி வழங்குதல் மற்றும் பதவி நீக்குதல் குறித்து யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சுக்கு இல்லை.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிருவாகம் கடந்த காலங்களில் பல சிக்கல்களுடனேயே இயங்கிவந்துள்ளது. கடந்த வருடம் இந்நிறுவனம் 15 கோடி 50 இலட்சம் ரூபா நஷ்ட மடைந்துள்ளது. இதனை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாக வழிநடத்திச் செல்லவேண்டிய தேவை அரசுக்குள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.