தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்படுவதால், அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இது மிகுந்த வேதனையைத் தருகிறது. நேற்று கூட தமிழக மீனவர்கள் 62 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.
எனவே இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக கடல் பகுதியில் இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட வேண்டும். கடல் கண்காணிப்புப் பணிகளை போதுமான அளவுக்கு பலப்படுத்த வேண்டியது அவசியம்.
கச்சத்தீவு சுற்றுப்பகுதிகளில் அதிக மீன்வளம் உள்ளதால் தமிழக மீனவர்கள் காலம், காலமாக இங்குதான் மீன்பிடித்து வருகிறார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்றாலும் கூட, அவர்களை இலங்கை ராணுவத்தினர் சர்வதேச விதிகளின்படி மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். அதைவிடுத்து துப்பாக்கியால் சுடக்கூடாது. அத்தகைய வன்முறையை கைவிட வேண்டும்.
இந்த பிரச்சனையில் தமிழக அரசின் உணர்வையும், வேதனையையும் மத்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுக்கு தெரிவிக்கலாம். கடலுக்குள் வழி தவறி எல்லை தாண்டி சென்றுவிடும் தமிழக மீனவர்களிடம் இலங்கை ராணுவம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.