மொனறாகல மாவட்டத்தின் புத்தள பகுதியில் கடந்த 5 ஆம் நாள் கடத்தப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஜயசுந்தர விஜயக்கோன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.
புத்தளப் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவரைக் கண்டுபிடிப்பதற்கு என்று சிறப்பு காவல் குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதலில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் நேற்றிரவு 10:00 மணியளவில் கொட்டாவ காவல் நிலையத்திற்கு முன்னாள் பிரதியமைச்சர் ஜயசுந்தர விஜயகோன் சென்றுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களே தன்னைக் கடத்தினர் என்றும் அவர்கள் வாகனம் ஒன்றில் கொண்டுவந்து தன்னை கொட்டாவப் பகுதியில் இறக்கி விட்டனர் என்றும் காவல் நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்திற்கு வந்தபோது கடுமையாகக் களைப்படைந்திருந்த அவரை வாக்குமூலம் பெற்ற பின்னர் களுபோவில மருத்துவமனைக்கு காவல்துறையின் அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரிவித்த கொட்டாவ காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி, முன்னாள் பிரதியமைச்சர் ஜயசுந்தர விஜயக்கோனை கடத்தியவர்கள் குறித்த விபரம் எதனையும் பெற முடியவில்லை. அவர் மிகவும் களைப்படைந்திருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றோம். சிகிச்சைக்கு பின்னர் அவரிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பெறுவோம் என்றார்.